E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
செம்மொழி மாநாட்டில் விளையாடிய அழகு தமிழ்
ஜூன் 27,2010,20:32

கோவை செம்மொழி மாநாடு பெயரளவுக்கு மட்டும் இல்லாமல், நிஜமான தமிழ் மாநாடு ஆக விளங்கியது. தொகுப்பாளர், அரங்குகளின் பெயர்கள் போன்ற அனைத்திலும் அழகு தமிழ் விளையாடியது.

* செம்மொழி மாநாட்டின் நிகழ்வுகளை அறிவிக்க நல்ல வேளை "டமில்' பேசும் "டிவி' தொகுப்பாளினிகளை அழைக்கவில்லை. இந்த பொறுப்பை ஏற்ற சுதா சேஷையன் அழகான தமிழில் நிகழ்ச்சிகளை அறிவித்தார். மைக் டெஸ்டிங் ஒன், டூ, த்ரீ என்பதை கூட, நடைபெற போகும் நிகழ்ச்சியின் பெயரைக் கூறி "ஒன்று, இரண்டு, மூன்று' என அறிவித்தார். பேசிய அனைவரும் " ல, ழ,ள' உச்சரிப்பில் கூட பிசிறாமல், மொழியை கவனமாக கையாண்டனர்.

* மாநாட்டு கருத்தரங்குகள், பட்டிமன்றங்களில் பேசிய பெரும்பாலானவர்கள் முதல்வர் கருணாநிதியை புகழ்ந்து பேச தவறவில்லை. புகழ்ச்சி பேச்சுகளுக்கு முதல்வர் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை.

* மாநாட்டு வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்த அரசு அலுவலர்கள் எவராலும் மாநாட்டு பந்தல் அல்லது ஆய்வரங்கங்களில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியாமலே போனது. கண்காட்சி அரங்கில் "டிவி' வசதி கூட இல்லாதது குறிப்பிடத்தக்கது. அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் எப்போது வேண்டுமானாலும் பார்வையிட வரலாம் என்ற பயத்தில் இடத்தை விட்டு நகராமல் இருந்தனர்.

* மாநாட்டு பந்தல் அரண்மனை போல் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தாலும் முகப்பு அரங்கைத் தவிர, பிற அரங்குகளில் மின்விசிறி அமைக்கப்படாததால், பார்வையாளர்கள் சிரமப்பட்டனர். இவ்வளவு செலவு செய்தவர்கள், இந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டார்களே என அனைவரும் புலம்பினர்.

* மாநாட்டு மேடைகளில் பேசிய முதல்வர் கருணாநிதி, எந்த இடத்திலும் "உடன் பிறப்பே' என்ற வார்த்தைகள் வந்து விடாமல் கவனமாக பார்த்துக் கொண்டார். அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் இது ஏமாற்றத்தை அளித்தாலும், இது அரசு நடத்தும் நிஜமான தமிழ் மாநாடு என முதல்வர் அறிவித்து விட்டதால் ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் அடக்கிதான் வாசித்தனர்.

* பாரதியார் பல்கலை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் விருந்தினர்களை உபசரிப்பதிலும், அவர்களின் கூடவே இருந்து வழிகாட்டுவதிலும் மிகுந்த கவனத்துடன் இருந்தனர். குறிப்பாக மீடியா சென்டரில் செய்திகளை அனுப்பும் கம்ப்யூட்டர் சிறு குறை ஏற்பட்டாலும் ஓடோடி வந்து உதவியது, ஆய்வுக் கட்டுரைகளை ஜெராக்ஸ் எடுப்பது என கூடவே இருந்து ஒத்துழைத்தனர்.

* நிறைவு நாளான நேற்று துவக்க நாளைப் போலவே அதிக கூட்டம் காணப்பட்டது. கூட்டம் சேர்க்க வெளி மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் அழைத்து வரப்பட்ட உடன் பிறப்புக்கள், வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு பி.எஸ்.ஜி., கல்லூரி வளாக மரத்தடி நிழலில் படுத்துறங்கினர்.

* மாநாட்டு பந்தலில் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியிலும் ஒலிபரப்பப்பட்ட முதல்வருக்கான வாழ்த்துப் பாடலை அனைவரும் ரசித்தனர்.

* மாநாட்டு ஆய்வரங்குகளுக்கு சூட்டப்பட்டிருந்த தமிழ் புலவர்களின் பெயர்கள், பங்கேற்க வந்திருந்த தமிழறிஞர்களை மிகவும் கவர்ந்தது.

* ஊடகம், ஆய்வரங்கு, இணைய மாநாடு, இணைய கண்காட்சி போன்ற ஒவ்வொன்றும் தெளிவான தமிழில் குறிப்பிடப்பட்டிருந்ததால், ஐந்து நாள் மாநாட்டில் ஒவ்வொருவரும் அழகான இந்த தமிழ் பெயர்களை உச்சரித்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது மாநாட்டின் வெற்றிகளில் ஒன்று.

வாசகர் கருத்து (13)
2010-07-10 16:22:47 IST
என்ன பண்ணி என்ன பயன்? ஒரு வாரத்திற்கு பிறகு எல்லாரும் மறந்துடுவாங்கலே????? ...
கே.சுபாஷ் உரல்பட்டிஉடுமலைப்பேட்டை,இந்தியா
2010-07-04 13:10:05 IST
இந்த மாநாட்டின் மூலம் தமிழுக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்றோ அல்லது இந்த மாநாட்டை நடத்தியவர்கள் அல்லது பங்கேற்றவர்கள் யாருக்காவது அத்தகைய நம்பிக்கை ,இருக்குமென்றோ யாரவது நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்! புகழ் பாடுபவர்கள் எல்லாம் ஒன்று எதாவது ஒரு சொந்த லாப நோக்கம் உடையவர்கள் ; அல்லது அப்பாவி பொது மக்கள். ஆனால் உண்மையான தமிழ்ப் பற்றாளர்களின் மனம் வேதனையில் வெந்து கொண்டிருக்கிறது என்பதை என்பதை எத்தனைபேர் உணர்வார்கள் எனபது தெரியாது. ஆனாலும் அதுதான் உண்மை. ....
s.shanmugam karur,இந்தியா
2010-07-01 13:08:54 IST
உண்மையாகவே நான் செம்மொழி மாநாட்டை பார்பதற்கு மிகவும் விரும்பினேன். ஆனால் போக முடியவில்லை. இருப்பினும் அத்துனை நிகழ்சிகளையும் தொலைக்காட்சி வாயிலாக பார்த்து ரசித்தேன். மிகவும் இனிமை .நன்றி செம்மொழி...
பி.ஆர்..லக்ஷ்மி chennai,இந்தியா
2010-07-01 05:42:37 IST
இணைய மாநாட்டில் கட்டுரை வாசிப்பாளராக இருப்பவருக்கு மடிகணினியில் தேவைப்படும் மென் பொருளை பதித்து தர சரியான வல்லுனர்கள் இல்லை. இதனால் அவதிப்பட நேர்ந்தது....
Mathumitha Chennai,இந்தியா
2010-06-29 19:45:11 IST
Vaalha tamil moli, valarga nam panpaadu...
நாகராஜ் பெங்களூர்,இந்தியா
2010-06-29 13:48:33 IST
இந்த மாநாடு கருணாநிதி புகழ் பாடுவதற்காகதான் என்று சொன்னார்கள். ஆனால் கடைசியாக எல்லோரும் இந்த மாநாடு கருணாநிதி புகழ் மட்டுமே பாடவில்லை, செம்மொழியாம் தமிழுக்கும் மாநாடு நடத்தியுள்ளார் என்று ஒத்துகொள்ளவேண்டிய விஷயம் தான். பாராட்டுகள். பெங்களுருலிருந்து நாகராஜ்...
shanmugasundaram chennai,இந்தியா
2010-06-29 12:18:07 IST
மாபெரும் மாநாட்டை நடத்திய முதல்வருக்கு நன்றி....
glenz kovai,இந்தியா
2010-06-28 09:20:57 IST
எதற்காக இத்தனை ஆங்கில வார்த்தைகள் இந்த செய்தி குறிப்பில். தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அல்லது ஒரு வாரகாலம் தமிழ் தமிழ் என முழங்கியாயிற்று, இனி ஆங்கிலம் கலந்த தமிழ்தான் என முடிவு செய்து விட்டீர்களா?...
Arulmozhi thevan KualaLumpur,மாலத்தீவு
2010-06-28 05:25:29 IST
செம்மொழி மாநாட்டுச் செய்திகளை அழகாகத் தொகுத்தளித்தமைக்கு நன்றி. ஆயினும், படிப்பது தேவாரம் - இடிப்பது சிவன் கோயில் என்ற வகையில் தான் இருக்கிறது உங்கள் செய்தித்துளி. "ரியாக்சன்", டிவி, நிஜம், மீடியா செண்டர், கம்பியூட்டர், ஜொராக்ஸ் ஆகியவற்றுக்கு நல்லத் தமிழில் சொற்கள் வழக்கில் வந்துவிட்ட பின்னரும், அதுவும் செம்மொழி மாநாட்டுச் செய்திகளை வழங்கும் போது ஏன் இவற்றின் பயன்பாடு? எதிரொலி, தொலைக்காட்சி, ஊடக நடுவம், கணினி, நகல் என்ற சொற்களை உடனடியாக அங்கு மாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வேளையில், தேராக மட்டும் செம்மொழி மாநாடும் அதன் தீர்மானங்களும் இருக்கக் கூடாது என்பது நமது அவா. திருவிழாவில் தேரை அலங்கரித்து திருவீதி உலா வந்த பின், உற்சவர் ஆலயம் சென்றவுடன் தேர் அடுத்தத் திருவிழாவில் தான் மீண்டும் மதிப்பு பெறும். ஆனால், செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் செயலாக்கப்பட வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள். இதற்கு முன் தமிழகத்தில் நடைபெற்ற எல்லா தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன; அல்லது கழிவுநீரில் நனையப்பட்டுள்ளன. ...
சுந்தரம் madurai,இந்தியா
2010-06-28 05:05:53 IST
நான் கடந்தமுறை தஞ்சை மாநாட்டிற்கும் சென்றேன் இந்த மாநாட்டிற்கும் சென்றேன் தஞ்சையில் நடந்தது முழுக்க முழுக்க கட்சி (அதிமுக) மாநாடு போல் தான் நடந்தது தஞ்சை முழுவதும் ஜெயலலித்தா கட் அவுட்கள் மற்றும் கொடிகலாய் காட்சி அளித்து ஆனால் இந்த கோவையில் அப்படி எதுவும் இல்லை இது ஒரு முன்னோட்டம் தான் இனி நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் பொது நிகழ்சிகளில் இதுபோல் கட்சி சார்பற்று நடத்தத் வேண்டுகிறோம் அதே நேரம் நாம் தமிழர்கள் என்ற உணர்வு நமக்குள் வந்து இருக்கவேண்டும் அதாவது இதல் கலந்து கொள்ளாமல் இருந்துவித்து மட்டும் அல்லாமல் அதை விமர்சனம் செய்த ஜெயலலித்தா வைகோ போக்கு கண்டிக்கத்தக்கது ...
ப.க.சேகரன் chennai,இந்தியா
2010-06-28 04:59:34 IST
இது தமிழர்களுக்கு தமிழுக்கு கிடைத்த வெற்றி என்று தான் சொல்லவேண்டும் ...
வே.குமார் செயன்கொண்டசோழபுரம்,செனகல்
2010-06-27 21:49:20 IST
உலக தமிழ் செம்மொழி மாநாடு வெற்றி அடைந்ததில் பெருமிதம் கொள்கிறோம் அதே சமயம் எல்லோரும் தமிழில் உரையாட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். தினமலரில் கூட ஆங்கில வார்தைகள தவிர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் . ( இந்த செய்தியில் கூட முதல்வர் முகத்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை என்று வண்டு உள்ளது ). ஊடகங்கள் (திரைப்படம் , செய்தி தாள் மற்றும் தொலை காட்சி) நினைத்தால் கண்டிப்பாக எல்லோரும் தமிழில் உரையாடுவார்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் ...
sethupathy trichy,இந்தியா
2010-06-27 21:34:51 IST
இனிய செய்தி... தொடரட்டும்...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »