E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
எதிர்கால சமுதாயம், தமிழை விரும்பிப் படிக்கும்! தமிழ்ப் பல்கலை துணை வேந்தர் நம்பிக்கை
ஜூன் 26,2010,20:58

கோவை : "எதிர்கால சமுதாயம், தமிழை விரும்பிப் படிக்கும் சூழல் உருவாகும்,'' என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் ராசேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கங்கள் குறித்து அவர் கூறியதாவது:

செம்மொழி மாநாட்டில் முக்கிய அங்கம் வகிப்பது, ஆய்வரங்கம்தான். முதல் நாளிலேயே 66 அமர்வுகளில் 259 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்பும், தரமும் மிகச் சிறப்பாய் அமைந்துள்ளன. தமிழின் வளர்ச்சி குறித்து எல்லோரும் அக்கறையோடு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

ஒரு மொழியின் வளர்ச்சி என்பது, அது பயன்பாட்டு மொழியாக இருக்கும்போதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. காலமும் சமுதாயமும் மாறுவதற்கேற்ப, மொழியும் மாற வேண்டும். எனவே, தமிழைப் பயன் பாட்டு மொழியாக வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் இப்போது இருக்கிறது. அதற்கான ஆலோசனைகளைத்தான் ஆய்வரங்கத்துக்கு வந்துள்ள அறிஞர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். தமிழ்க் கல்வி முறையில் மொழிக் கல்வியைப் பொறுத்தவரை நாம் சிறப்பான இடத்தில் இருக்கிறோம். மொழி வழிக்கல்வியில் நாம் கூடுதல் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளோம்.

தமிழில் படிப்பவர்களுக்கு வாழ்வாதாரம் எதுவும் கிடைப்பதில்லை என்பதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற பொருண்மைகளில் பட்டம் படிப்போருக்கு இருக்கும் வாய்ப்புக்களை விட, தமிழில் பட்டம் பெறுவோர்க்கு அதிக வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

இணையதளத்தில் பல லட்சம் பக்கங்கள் இருக்கின்றன. அவற்றைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது. தமிழ் படித்தவர்களுக்கு வேறு மொழியில் தேவையான பயிற்சியை மட்டும் வழங்கினால், நிறைய வேலை வாய்ப்புகளைப் பெற முடியும். இளைய சமுதாயம், வேர்களைத் தேடுகிற காலம் இது. இந்தச் சூழலில் மொழியின் மீது எல்லோரும் நம்பிக்கை வைக்க வேண்டும். எதிர்கால சமுதாயம், தமிழை விரும்பிப் படிக்கிற சூழல் உருவாகும். அதற்கான முன்னெடுப்புகளை அரசு நிச்சயமாக மேற்கொள்ளும். இவ்வாறு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் ராசேந்திரன் தெரிவித்தார்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »