E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
அறிவியல் மொழியாக வேண்டும் தமிழ்!
ஜூன் 26,2010,20:56

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்தில், 'மொழிக்கல்வி' என்ற பொருண்மையில் 'தொல்காப்பியரின் கல்வியியல் சிந்தனைகளும், கற்பித்தல் கோட்பாடுகளும்' என்ற தலைப்பில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பேராசிரியர் பழனிவேலு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். கல்வி முறைகள் எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் குறிப்பிட்டிருப்பதை அவர் ஆழமாக விளக்கியுள்ளார். தற்போதுள்ள கல்வி முறை குறித்து அவரிடம் கேட்டபோது கூறியதாவது:

இப்போது எல்.கே.ஜி.யிலிருந்து ஆராய்ச்சிப் படிப்பு வரையிலும் தமிழ் தெரியாமலே படித்து முடித்து விடலாம் என்கிற சூழல் இருக்கிறது. பள்ளியிலும் ஆங்கிலம், வீட்டிலும் ஆங்கிலம் என்று வரும்போது, தமிழ் கற்பதற்கான தேவையோ, அவசியமோ இல்லாத சூழ்நிலை உருவாகி வருகிறது. தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. தமிழில் அறிவியல்சார் மொழிச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில், அவர்களின் தாய்மொழியில்தான் எல்லோரும் மேல்நிலைக் கல்வி பயில்கின்றனர். புதிதாக அறிவியல் சொற்கள் எது வந்தாலும், அதற்கு அடுத்த நாளிலேயே அவர்களின் தாய் மொழியில் அதற்கு ஒரு வார்த்தையைக் கண்டு பிடித்து விடுகின்றனர். தாய்மொழியில் படிப்பதால், ஜப்பான், சீனா நாடுகள், வளர்ச்சியில் எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை.

இன்னும் சொல்வதானால், ஆங்கிலம் அறிந்த நாடுகளின் வளர்ச்சியை விட, அந்த நாடுகளின் வளர்ச்சியும் அதிகமாயிருக்கிறது. மனித மாண்புகளும், பண்பாடும் சேதப்படாமல் இருக்கிறது. அதேபோல, தமிழையும் அறிவியல் மொழியாக மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். தமிழில் தேர்ச்சி பெற்றாலே போதுமென்கிற நிலை இப்போது இருக்கிறது. அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது போல, தமிழில் அதிக மதிப்பெண் பெறுவோர்க்கும் மேல்நிலைக் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு முனைவர் ஞா.பழனிவேலு கூறினார்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »