

கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் நேற்று மாலை "சமயம்
வளர்த்த தமிழ்' கருத்தரங்கு நடந்தது.
நிகழ்ச்சியில், சாந்தலிங்க
ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசியதாவது: பழமையான, உயர்வான மொழி தமிழ்
மொழி.கொங்கு நாடு மிகச் சிறந்த பண்பாடு கொண்ட நாடு. தலை சிறந்த புலவர்கள்,
அறிஞர்கள், சமய வழியில் தமிழை வளர்த்தவர்கள் வாழ்ந்த நாடு. கொங்கு நாடு மலை
மற்றும் மலை சார்ந்த பகுதியான குறிஞ்சியை சேர்ந்தது. பழங்காலம் முதல்
இப்பகுதி மக்கள் தெய்வபக்தியோடு வாழ்ந்தனர் என்பதை சமய நூல்கள்
எடுத்துரைக்கிறது. 6ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை இலக்கிய
காலம் ஆகும். இனி வரும் காலங்களில் கோவில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட அனைத்து
நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழியில்
நடத்த அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ்,
எல்லாம் தமிழ், என்பதை வலியுறுத்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உதவும்.
இவ்வாறு, சாந்தலிங்க ராமசாமி அடிகள் பேசினார்.
பேராயர் சின்னப்பா
பேசியதாவது: கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, தொன்மை
மற்றும் பழமை வாய்ந்த மொழியான தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் விழா. இதன்
மூலம் உலகளவில் செம்மொழியாக திகழும் தமிழ் மொழி கொண்டுள்ள பெருமை குறித்து
உலக மக்கள் அனைவருக்கும் உணர்த்த முடியும். திராவிட மொழிகளில் பழமையானது
தமிழ் மொழி. மொழிகளில் வணிகத்துக்கு-ஆங்கிலம், இசைக்கு-கிரேக்கம்,
சட்டத்துக்கு-லத்தீன், தத்துவத்துக்கு-ஜெர்மன், காதலுக்கு- இத்தாலி என உள்ள
நிலையில் தமிழ் மொழி-பக்தியை அடிப்படையாக கொண்டுள்ளது. இவ்வாறு, சின்னப்பா
பேசினார்.
"சைவம்' குறித்து சாரதா நம்பி ஆரூரான் பேசுகையில் ""சைவ
இலக்கியங்கள் சமுதாய முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும் என்பதை
எடுத்துரைக்கின்றன. உதயசூரியன் குறித்து முதலில் பாடியவர் நக்கீரர். சைவ
இலக்கியங்கள் சிவனை அடிப்படையாக கொண்டது. நமச்சிவாயம் என்றால் அருள்
பெறலாம்'' என்றார்.
"சமணம்' குறித்து ஸ்ரீபால்
பேசுகையில்""வாழ்க்கையில் அனைவரும் தங்களது ஆன்மவை தூய்øயாக வைத்துக்கொள்ள
வேண்டியது அவசியம். சமணத்தை தவிர்த்தால் தமிழ் இல்லை. தமிழ்மொழியும்,
சமணமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. தொன்மையான மொழியாக திகழும் தமிழ் மொழியின்
வளர்ச்சியில் சமணத்தின் பங்கு அதிகம் உள்ளது'' என்றார்.
"வைணவம்'
குறித்து பேராசிரியர் ஞானசுந்தரம் பேசுகையில்"" மற்றவர்கள் படும் துன்பம்
கண்டு கவலைப்படும் குணம் கொண்டவர்கள் வைணவர்கள். வைணவம் வளர்ச்சியில்
ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் மற்றும் உரையாசிரியர்கள் பங்களிப்பு அதிகம்
உள்ளது. தமிழும்,வைணவமும் வேறல்ல'' என்றார்.
"கிறித்துவம்'
குறித்து அமுதன் அடிகள் பேசுகையில்"" செம்மொழியான தமிழ் மொழி வளர
கிறித்துவர்கள் அக்காலத்திலேயே பேச்சு தமிழ் இலக்கணத்தை வகுத்து
செயல்பட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சியில் கிறித்துவம் முக்கிய பங்கு
வகிக்கிறது'' என்றார்.
"இஸ்லாம்' குறித்து பேராசிரியர் காதர்
மொகிதீன் பேசுகையில்"" கடல் வழியாக வந்தது இஸ்லாம். தமிழ் மொழியின்
வளர்ச்சியில் இஸ்லாம் அறிஞர்கள் பங்களிப்பு உள்ளது. இயல், இசை, நாடகத்தில்
துவங்கி சமயத்தமிழ், அறிவியல் தமிழ், கம்ப்யூட்டர் தமிழ் வரை தமிழ்மொழியின்
வளர்ச்சியில் இவர்களது பங்களிப்பு இன்றும் தொடர்கிறது'' என்றார்.
- மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'
(745)
- கோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!
(419)
- தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி? மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு
(236)
- உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்
(196)
- தமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல்
(142)