E-paper   |   Sitemap   |   RSS
எழுத்தின் அளவு: A+ A-
சங்க இலக்கியத்தில் தவிர்க்கப்பட்ட 'தாலி'
மார்ச் 11,2011,16:58

தமிழ் பண்பாட்டு ஆய்வில் புதிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாற்பதாண்டுகாலமாக உழைத்து அதில் ஓரளவிற்கு வெற்றிகண்டவர் தொ.பரமசிவன். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகவும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழியல் துறைத்தலைவராகவும் பரிணமித்தவர் பரமசிவன். பாளையங்கோட்டையில் பிறந்த பரமசிவன் இலக்கியம், சமயம், கோயில், மரபு, பண்பாடு என்று அனைத்து விசயங்களையும் அலசி ஆராய்ந்து அவற்றின் தொன்மைகள் குறித்து ஆய்வு நூல்களை இயற்றி தனது தமிழ்தாகத்தை தணித்துக் கொண்டவர்.
பொதுவாக ஆய்வு நூல்களை எழுதுபவர்கள் கல்வெட்டு சான்றுகள்,தொல்பொருள் ஆதாரங்கள், இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் வரலாற்றுகளை வகுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால், பரமசிவன் தனது ஆய்வு நூல்களை மக்களின் வாழ்க்கைசார்ந்த பண்பாட்டு கூறுகளின் அடிப்படையில் உருவாக்கி வரலாற்று ஆசிரியர்களுக்கு புதிய வழிகாட்டுதலை ஏற்படுத்தியுள்ளார்.
மதுரையில் உள்ள "அழகர்கோயில்' குறித்து இவர் எழுதிய ஆய்வு கட்டுரை நூல் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியது. இதற்காக பன்னிரண்டு ஆண்டுகள் களப்பணியாற்றிய பரமசிவன், "அழகர்கோயிலை' விரிவாக ஆராய்ந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த ஆலயம் கைமாறிச் சென்ற விதம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து நுட்பமாக விவரித்துள்ளார்.
அழகர்கோயிலை சுற்றி உருவான நிலமானிய அமைப்பு, சாதிக்கட்டுமானம், திருவிழாக்களில் அடுக்கதிகாரம் வெளிப்படும் முறைகள் குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார். தமிழில் செவ்வியல்தன்மை கொண்ட முதல் வழிகாட்டி நூலாக அழகர்கோயில் கருதப்படுகிறது.
தமிழர்களின் தொன்றுதொட்டு நிலவிவரும் சம்பிரதாய சடங்குகளில் ஒன்றான தாலிகட்டுதல் குறித்து ஆசிரியர் பரமசிவன் தனது "அழகர்கோயில்' நூலில் கூறியிருப்பதாவது:
தாலிகட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதை குறிக்கின்றன. தாலிகட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்கு பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரிமுறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்கு தாலிமுடிச்சு போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழகத்தில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா..? இல்லையா..? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954 ல் பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தை தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளந்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., மட்டுமே. கி.பி., 10 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார்.
பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர். கி.பி., 7 ஆம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாக பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. தமிழ்நாட்டில் ஆழிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருட்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.
சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல. பெண்ணுக்குரிய மங்கலப்பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.
இதுபோன்று இன்னும்பல சுவையான தகவல்கள் ஆய்வாளர் பரமசிவனால் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (1)
karthick சென்னைஅன்னநகர்,இந்தியா
2011-06-05 11:34:17 IST
hello...

உங்கள் கருத்தை பதிவு செய்ய
பெயர்  :
மின்னஞ்சல் :
இடம் (அ) நகரம்  :
நாடு :
உங்கள் கருத்து :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »