E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 02,2010,00:00

செம்மொழி மாநாடுக்காக, பல கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடப்பதால் கோவைக்கு நன்மை. கோவை பந்தயச் சாலையில் நடை பயின்றால், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், உருது, இந்தி என எல்லா மொழிகளையும் கேட்க முடிகிறது. ஆனால், செம்மொழியாம் தமிழ், செவிகளில் விழுவது அரிதாய் இருக்கிறது. தமிழர்களெல்லாம் ஆரோக்கியமாக இருக்கிறார்களா; தமிழ் ஆரோக்கியமாக இல்லையா என்ற கேள்வி எழுகிறது. தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால் அபராதம் என்று பல முறை எச்சரித்தும், கோவையில் ஆங்கில பெயர்ப்பலகைகள்தான் அதிகம் மின்னுகின்றன. எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம். இருக்கும் தமிழிலும் எக்கச்சக்க பிழை. இதே நிலை தொடர்ந்தால், கோவையில் தமிழ் பேசுவோர், சிறுபான்மையாகி விடுவர். இந்தச்சூழலில், இங்கே செம்மொழி மாநாடு நடப்பது மகிழ்வான ஒன்றே. ஆனால், இந்த மாநாடும் இன்னொரு கட்சி மாநாடு போல முடிந்து விடக்கூடாது என்பதே எல்லோரது வேண்டுகோள். மாநாட்டுப் பணியை ஆய்வு செய்ய வரும்போதே, பேனர்கள் மிரட்டுகின்றன; மாநாட்டை நினைத்தால் அச்சம் மேலிடுகிறது. இதுபோன்ற ஆரவாரங்களுக்குப் பதிலாக, ஆளுக்கொரு திருக்குறள் புத்தகம் கொடுக்கலாம்; பாரதியார் கவிதை நூலை பரிசாய் கொடுக்கலாம். இன்னும் எத்தனையோ விதமாக, இந்த மாநாட்டை அமர்க்களப்படுத்தலாம். இதெல்லாம், மற்றவர்களுக்கான பரிந்துரைகள். அரசு செய்ய வேண்டியவை பல இருக்கின்றன; கொங்கு மண்ணில் மட்டுமின்றி, தமிழக மக்கள் எல்லோர் நாவிலும் தங்கத் தமிழை தங்க வைப்பதற்கான பிரகடனத்தை இந்த மாநாடு வெளியிட வேண்டும்; அது, செம்மொழித் தமிழுக்கு இந்த மாநாடு சூட்டுகிற மணி மகுடமாக இருக்க வேண்டும்.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »