E-paper   |   Sitemap   |   RSS
ஏப்ரல் 01,2010,00:00

கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று அறிவித்ததும், கொங்கு மண்டலமே உற்சாகத்தில் குதித்தது; கோவை மக்கள், சந்தோஷக் கூத்தாடினார்கள். பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட கோவை நகரத்துக்கு, அரசே புதிய அங்கீகாரம் அளித்து விட்டதாக ஆனந்தப்பட்டார்கள்; அது பொய்யாகவும் இல்லை. 17 சாலைகளைப் புதுப்பிக்க 60 கோடி, புதை மின் வடம் அமைக்க 55 கோடி, இணைப்புச் சாலைகள் அமைக்க 13 கோடி, 47 பூங்காக்கள அமைக்க, புதிய நடைபாதை அமைக்க...என 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதியைக் குவித்தது தமிழக அரசு. அந்த வேலைகளும் நடந்து வருகின்றன.ஆனால், இந்த வளர்ச்சிப்பணிகளை சாதனை என்று கொண்டாட வேண்டிய கோவை மக்கள், வெளியில் சொல்ல முடியாத வேதனையில் தவிக்கின்றனர். மாநாட்டுக்காக மட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளில்'வளர்ச்சி' என்ற பெயரில் கோவை நகரில் பல ஆயிரம் மரங்கள் வீழ்த்தப்பட்டதே இந்த வேதனைக்கான காரணம்.செம்மொழி மாநாட்டுக்காக எத்தனையோ துறைகளுக்கு எவ்வளவோ கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் நடக்கின்றன. ஆனால், மாநாட்டின் நினைவாக ஒரு மரம் வைப்பதற்கான முயற்சியை எந்த அரசுத்துறையும் எடுக்கவில்லை. மாநாட்டில் வனத்துறையின் பங்களிப்பு என்று எதுவுமே இல்லை.தமிழைப் பற்றி 55 தலைப்புகளில் அலசப்போகிறது மாநாடு; ஆனால், தமிழ் மண்ணின் இயற்கை, சூழலியல் பற்றி ஆய்வேயில்லை என்பதில் சூழல் ஆர்வலர்களுக்கு சற்று வருத்தமே. பேச வேண்டுமென்றில்லை; குறைந்தபட்சம் இந்த மாநாட்டின் நினைவாக ஒரு லட்சம் மரங்களை, கோவை நகரில் வளர்க்க சிறப்பு நிதி ஒதுக்கி, அதை நிறைவேற்றினால் மாநாட்டின் நினைவு இன்னும் பசுமையாகுமே.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »