E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 25,2010,00:00

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு, மாநில அரசுத்துறைகளுடன் மத்திய அரசும் கை கோர்த்து, கோவை நகருக்கு புதுப்பொலிவை ஏற்படுத்தி வருகின்றன. இதில், ரயில்வே துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது. மாநாட்டுக்கு கூட்டம் சேர்க்கப்போவதே இந்த துறைதான். மாநாட்டுக்கு பிற வாகனங்களில் வருவதை விட ரயில்களில்தான் அதிகமாக மக்கள் வருவார்கள் என்பது அரசின் எதிர்பார்ப்பு. இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சிறப்பு ரயில்களை இயக்கப்போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே, கோவை நகருக்கு வரும் 80க்கும் மேற்பட்ட ரயில்களிலும், சிறப்பு ரயில்களிலுமாகச் சேர்த்து, பல்லாயிரக்கணக்கான மக்கள், ரயில்களின் மூலமாக செம்மொழி மாநாட்டுக்கு வந்து இறங்கப்போகின்றனர். அனைவரையும் வரவேற்க அமர்க்களமாகத் தயாராகிறது கோவை ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில்முன்னும், பின்னுமாக தற்போது இரண்டு நுழைவாயில்கள் மட்டுமே உள்ளன. மாநாட்டை முன்னிட்டு, மேலும் இரு நுழைவாயில், சுரங்கப்பாதை, வி.ஐ.பி., வாகனங்களுக்கான தனிப்பாதை ஆகியவை உருவாக்கப்படவுள்ளன. வாகன நிறுத்துமிடம், பிரதான நுழைவாயில் ஆகியவை, பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, புதிய தோற்றம் பெருகின்றன. வடகோவை, பீளமேடு, போத்தனூர், இருகூர் ரயில் நிலையங்களும் மாநாட்டை முன்னிட்டு மேம்படுத்தப்படுகின்றன. இருகூர் இரட்டை ரயில் பாதை, போத்தனூர் இரு வழிப்பாதை, ஹோப் காலேஜ் ரயில்வே பாலம் விரிவாக்கம் என பல பணிகளும் துரிதமடைந்து வருவதால், செம்மொழி மாநாட்டின் பயனாக செம்மையாகிறது கோவை.



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »