E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 15,2010,00:00

தொட்டு விடும் தூரத்தில் செம்மொழி மாநாடு; இருப்பது இன்னும் எட்டே நாட்கள். கடந்து போயின நாட்கள்; நடந்து கொண்டேயிருக்கிறது வேலை. பல சாலைகளில் பள்ளங்கள் மிரட்டுகின்றன. புதிதாய் முளைத்த தெரு விளக்குகள், இருட்டுக்குள்ளே இடிபடும் அச்சத்தில் நிற்கின்றன. நடைபாதை அமைக்கும் பணி, ஆங்காங்கே தடை பட்டு நிற்கிறது. சாலைத் தீவுகளில் இப்போதுதான் சுவர்கள் எழும்பிக் கொண்டிருக்கின்றன. எப்போது அவை பூங்காவாக மலருமோ தெரியவில்லை. அரசு அலுவலகங்களில் எல்லாம் வெள்ளையடிக்கும் வேலை வேகமாக நடக்க, ஆட்சியர் அலுவலகமோ அழுது வடிந்து கொண்டிருக்கிறது. மாநாடுக்கு அரை நாளுக்கு முன்பாவது எப்படியும் முடித்து விடுவார்கள் என்றிருந்த நம்பிக்கை, அரை குறையாக எப்படியோ முடிக்கப் போகிறார்கள் என்று அவ நம்பிக்கையாக மாறியிருக்கிறது. அங்கே இங்கே என்று குறைகள் இருந்தாலும், செம்மொழி மாநாட்டுக்காக உற்சாகமாய்த் தயாராகி விட்டது கோவை நகரம். மாநாட்டுப் பந்தல், கண்காட்சி அரங்கம், ஆய்வரங்கம், அலங்கார ஊர்திகள் என மாநாட்டுக்குத்தேவையான எல்லாப் பணிகளுமே திட்டமிட்டபடி, வேகமாகவே நடக்கின்றன. மேம்பாட்டுப் பணிகள் எதுவும் முடியாவிட்டாலும் கூட, மாநாடு நடத்துவதில் எந்தப் பிரச்னையும் இருக்கப்போவதில்லை. இந்த நேரத்தில், கோவை மக்களின் கோரிக்கை ஒன்றே. அவசர கதியில் அரை குறையாக நடந்த எல்லாப் பணிகளையும் அப்படியே விட்டு விடாமல், மாநாடு முடிந்த பின்பாவது அதை முழுதாக முடித்து, இந்த நகருக்கும், மாநாடுக்கும் அழகு சேர்க்க வேண்டுமென்பதே. ஆவன செய்யுமா அரசு?



மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »