E-paper   |   Sitemap   |   RSS
ஜூன் 09,2010,00:00

செம்மொழி மாநாட்டை கோவையில் நடத்த முதல்வர் முடிவு செய்ததற்கு, பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இங்கேயிருக்கும் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் ஒரு காரணம் என்கிறார்கள்; அரசியல்ரீதியாக வலுப்பெறுவதற்கு இந்த மாநாட்டைப் பயன்படுத்துவதாகச் சொல்வோரும் இருக்கிறார்கள்; கொங்கு மண்ணில் தமிழ் மெல்லச் செத்து வருவதும் கூட காரணமாயிருக்கலாம் என்கிறார்கள்.இந்த காரணங்கள் எல்லாவற்றிலுமே கொஞ்சம் உண்மை இருப்பதற்கு வாய்ப்புண்டு. இதில், முக்கியமாய் கவனிக்க வேண்டிய சில செய்திகள் இருக்கின்றன. சென்னையை ஒப்பிடுகையில், கோவையில் இருக்கும் கட்டமைப்பு வசதிகளைப் பார்த்தால், மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம் தெரியும். இங்கே செய்வதற்கு இன்னும் நிறைய வேலைகள் இருக்கின்றன.இந்த மாநாட்டால், கோவையின் தேவையை உன்னிப்பாய்க் கவனிக்க, முதல்வருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. எல்லாவற்றையும் இப்போதே நிறைவேற்றி விட முடியாது. ஆனால், முக்கியமான தேவைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதி எடுத்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டாலே போதும். கோவை மக்கள் நன்றி மறக்காதவர்கள்; தங்கள் நன்றியை தேவையான நேரத்தில், நிச்சயமாக வெளிப்படுத்துவார்கள்.கோவைக்கான தேவையை நிறைவேற்றுவது மட்டுமே இந்த மாநாட்டின் நோக்கமில்லை. இந்த மண்ணில் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கிற தமிழுக்கு, மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டிய பொறுப்பும், செம்மொழிக்கு மாநாடு நடத்தும் அரசுக்கு இருக்கிறது. இதில் அரசின் பங்களிப்பு மட்டும் போதாது; இங்குள்ள அமைப்புகளும் அதற்கு உறுதி எடுக்க வேண்டும். அதற்கான துவக்க நிகழ்வாக இந்த செம்மொழி மாநாடு அமையட்டும்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »