E-paper   |   Sitemap   |   RSS
மார்ச் 20,2010,00:00

ஊர்த்திருவிழா வந்து விட்டால் வீடுகளெல்லாம் வர்ணம் பூசிக்கொள்ளும்; எங்கெங்கோ இருக்கும் உறவுகளெல்லாம் வண்டி கட்டிக்கொண்டு வந்து இறங்குவார்கள். ஊரெல்லாம் ஆட்டம், பாட்டமுமாய் களை கட்டும்; திருவிழா முடிந்து, அவரவர் ஊர் திரும்பினாலும் மனசுக்குள்ளே சுகமான நினைவிருக்கும்.

அப்படியொரு திருவிழாவுக்கு, குதூகலமாய்த் தயாராகிக்கொண்டிருக்கிறது கோவை. அதிலும், இது சாதி, மத பேதங்களைக் கடந்து தமிழர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஆனந்த உற்சவம் என்பதால், கொங்கு மண்ணில் இப்போதே பண்டிகை உற்சாகம் பற்றிக்கொண்டு விட்டது.

வருகிற விருந்தாளிகளுக்கு தங்குமிடங்கள் ஏற்கனவே ஏற்பாடாகி விட்டன. கொடிசியா வளாகத்தில் 30 ஆய்வரங்கங்கள் நடக்கவுள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து 558 தமிழறிஞர்கள் பதிவு செய்திருக்கின்றனர். 214 பேர், ஆய்வரங்கங்களில் கட்டுரை வாசிக்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து 1, 500க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்கள் என தமிழ்க்காதலர்கள் எல்லோரும், இந்த ஆய்வரங்கத்தில் பங்கேற்கவுள்ளனர். குழுக்களின் உறுப்பினர்கள், அதிகாரிகள் என மேலும் பலர், கோவையில் வந்து முகாமிடவுள்ளனர்.

இவர்கள் தங்குவதற்காக கோவையில் 2, 200 ஏ.சி. அறைகள், 1700 சாதாரண அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. கலைநிகழ்ச்சிகள், அவர்களுடன் வருபவர்கள் என 900 பேரை, கல்லூரி விடுதிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பத்திரிக்கையாளர்கள் தங்குவதற்கு பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி விடுதியிலும், பாதுகாப்புக்காக வரும் 8000 காவல்துறையினர் மற்றும் 1000 தீயணைப்பு வீரர்களுக்கு கல்யாண மண்டபங்கள், பள்ளிகள் என பல இடங்களும் தயார் செய்யப்படுகின்றன.

கோவையை சுற்றியுள்ள திருப்பூர், மேட்டுப்பாளையம் போன்ற நகரங்களிலும் அறைகளும், கோவை நகரிலேயே அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. கோவைக்கு வரும் தமிழறிஞர்களை சுற்றுலா அழைத்துச் செல்லவும் ஏற்பாடு நடக்கிறது.

ஊருக்குள்ளே திருவிழா நடக்கும்போது, பள்ளிக்குழந்தைகள் பங்கேற்காமல் இருந்தால் எப்படி...பள்ளி, கல்லூரிகள் அனைத்துக்கும் விடுமுறைதான்.


மேலும் »
சற்றுமுன்...
அதிகம்...
Home தினமலர் முதல் பக்கம் »